கடந்த சில வாரங்களாக தில்லையில் நடராஜர் முன்னிலையில் தேவாரம் பாடுவது சம்பந்தமாக ஒரு பெரிய சர்ச்சை கிளம்பி, போலீஸ் தடியடி, கைது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு அமைதி திரும்பியது போல் தோன்றுகிறது. இன்றைய பத்திரிகைகளீல் தமிழக முதல்வர், தேவாரம் பாடிய திரு ஆறுமுகசாமி அவர்களுக்கு மாதம் ரூபாய் மூவாயிரம் கருணை தொகையும், ரூபாய் 15 மெடிகல் செலவிற்கும் தருவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நல்ல செய்தி. எந்த நோக்கத்தில் இந்த முடிவு எடுத்தாலும், தில்லையில் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு தமிழக முதல்வர் ஆற்றும் பணி சிறப்பானதே.
இந்த தில்லை நடராஜர் கோவில் விவ்காரம், ஒரு பெரிய உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் தொன்மை வாய்ந்த மொழிகளில் சமஸ்கிருதமும், தமிழும் முதன்மையானவை. இன்றைக்கு தமிழ் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம், சைவமும், வைணவமுமே. பன்னிரு ஆழ்வார்களும் , அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழில் பாடிய பிரபந்தங்களும், தேவரம் திருவாசகமுமே, தமிழை ஒரு புனிதமான மொழியாக வளர்த்தன. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்த தமிழ் பதிகங்கள் கோவிலில் அதற்குரிய பண்ணுடன் பாடப்படுகின்றன.
இன்றைய தமிழ் வளர்ச்சிக்கு சைவமும், வைணவமுமே 95 சதவிகிதம் காரணம். தமிழ் வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் செயவது 'ஆரவாரம்' மட்டுமே. தங்கள் பிள்ளைகளை 'கான்வெண்டில்' படிக்கவைத்து, 'மம்மி, டாடி' சொல்ல வைத்து மகிழ்பவர்கள். தமிழ் டி.வி. சேனல்களில் பேசப்படும் தமிழைப்பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.
தில்லையில் நடந்ததெல்லாம், தமிழ் ஆர்வலர்கள் என்கிற போர்வையில், நாத்திகர்கள் செய்த ஆர்பாட்டம் என்று பத்திரிகைகள் கூறுகின்றன. தில்லை தீட்சிதர்களும் , நாத்திகர்கள் விரித்த வலையில் சிக்கி, சரியாக கையாளத் தெரியாமல், விவகாரத்தை பெரிது படுத்தி விட்டார்கள். ஏதோ, இந்து மதம், குறிப்பாக பிராமணர்கள் தமிழுக்கு எதிரி போன்ற் மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு 'தில்லை நடராஜரையும், திருவரங்கம் அரங்கனையும் பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக' முழங்கிய நாத்திகர்கள், உண்மையிலே என்ன செய்தார்கள்? தங்கள் கொள்கைகளுக்கு மாறாக 'தேவாரம்' பாட துடிக்கிறார்கள். இப்போது நாத்திகம் பேசினால் யாரும் கேட்பதில்லை.
நாத்திகம் பேசும் பகுத்தறிவுவாதிகளின் முயற்சியால், தமிழ்நாட்டில் ஆன்மீகம் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. பகுத்தறிவு பேசப் பேச, 'தலையில் தேங்காய உடைத்துக்கொள்ளும்' அறிவுசாராத மூடநம்பிக்கைகள் பெருகத் தொடங்கிவிட்ட்ன. இந்தியாவில், தொன்று தொட்டு ஆன்மீகம், அறிவியல் சார்ந்தது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும், தேவையற்ற மூட நம்பிக்கைளை, பகுத்தறிவு வாதிகள் வளர்த்து விட்டனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில், இந்த அளவு மூட நம்பிக்கைகள் இல்லை. காரணம், அங்கு அதிகமாக யாரும் பகுத்தறிவு பேசுவதில்லை.
ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. நாத்திகம் பேசுபவர்களுக்கும் தில்லை நடராஜர் தான் கைகொடுக்க வேண்டியதாகிவிட்டது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது' என்று கூறுவார்கள். ' தில்லை நடராஜனை பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக முழக்கமிட்டவர்கள், தில்லை அம்பலத்தில் தேவாரம் பாட துடிப்பதை' இன்று பெரியார் உயிருடன் இருந்து பார்த்திருந்தால் என்ன கூறியிருப்பார்?