This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

திங்கள், 10 ஜனவரி, 2011

தலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு

வெற்றிகுரல் இதழ் 19
பல நேரங்களில், பத்திரிகைகளில், பஞ்சமி நிலங்களை மீட்பது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பலருக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன, அதன் நடைமுறை என்ன, அதற்குறிய சட்டங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரிவதில்லை.  அதை விளக்குவதற்காகத்தான் இந்த பதிவு.
தற்போது, ஆதிதிராவிடர்கள், தலித்துக்கள் என்று அழைக்கப்படும் மக்களை, ‘பஞ்சமர்கள்’ என்றும் கூறுவார்கள்.   வழக்கமாக நாம் மனு சாஸ்திரப்படி   நினைப்பது நான்கு வர்ணங்களைத்தான்.  ஏதோ ஒரு கால கட்டத்தில்,  இந்த வர்ணங்களை ஏற்காதவர்கள் ‘ஐந்தாவது வர்ணத்தை’ உருவாக்கினார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள் என்ப்படுபவர்கள்.
இந்த பஞ்சமர்கள், ஊருக்கு வெளியே, சேரிகளில் வாழ்ந்து வந்தார்கள்.  காலங்காலமாக, அவர்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களாகவும்,  மேல் ஜாதிக்காரர்களிடம் அடிமைகளாகவும் இருந்து வந்தனர். கருணாநிதி அடிக்கடி தன்னை ‘சூத்திரர்’ என்று தாழ்ந்த ஜாதியாக அடியாளம் காட்டி கொள்வதை, பஞ்சமர்கள் எதிர்க்கிறார்கள். அந்த காலங்களில், சூத்திரர்கள் என்ப்வர்களும் மேல் ஜாதியினரே என்கிறார்கள்.  இந்த விவாதத்தில் நான் இப்போது இறங்கவில்லை.  
பஞ்சமர்களுடைய நிலை பற்றி கவலை கொண்டு, 1891ம் ஆண்டில், செங்கல்பட்டில் ஆட்சியராக இருந்த டிரெமன்ஹரே என்கிற ஆங்கிலேயர்,  லண்டனிலுள்ள அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  இந்த கடிததின் அடிப்படையில்,  பிரிட்டிஷ் பாராளுமன்றம், 1892 ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது.
இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், Depressed Class  என்று கூறப்பட்ட தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்கு நிலங்களை இலவசமாக அளித்தது.  இந்த நிலங்களீல், தாழ்த்தப்பட்ட மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.  குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறர் பெயருக்கு மாற்ற முடியும்.  அதுவும், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்த (Depressed Class) வர்களிடம் தான் விற்க முடியும்.  வேறு வகுப்பினரிடம் விறறால், அநத விறபனை செல்லாது.
அரசு ரெவின்யூ ரிகார்டுகளில், இந்த நிலங்களைப்பற்றிய விவரங்கள் உள்ளன.
தவறுதலாக, யாராவது, இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்க முற்பட்டால், பத்திர பதிவு அதிகாரி, அதை பதிவு செய்யக்கூடாது. மீறி வாங்கினால்,  எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம்.  அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.
இந்த சட்டம், தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை பற்றிய ஒரு குறிப்பும், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில், விவரமாக இருக்கிறது.
1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வழியாக வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.  Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.
இந்திய அளவில், எவ்வளவு நிலங்கள், இந்த பஞ்சமி நிலங்களாக கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய சரியான் புள்ளி விவரங்கள் இல்லை.  திமிழ் நாட்டில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  ஆனால், நான் மேலே குறிப்பிட்ட சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பில், 12 லட்சம் ஏக்கர் அந்த கால சென்னை மாகாணத்தில் (கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா) பஞ்சமி நிலங்களை கொடுத்ததாக  குறிப்பிட்டுள்ளார்கள்.  இந்திய அளவில், சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  
காலப்போக்கில், பஞ்சமி நிலங்கள் பிற வகுப்பினருக்கு விற்கப்பட்டுள்ளன.  விற்கப்படாத நிலங்க்ளின் பெரும் பகுதி, மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  இது பற்றிய புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டு அளவில் இல்லை.   சென்ற வாரம், தமிழக அரசு, கவர்னர் உரையில், பஞ்சமி நிலங்களை பற்றி ஆய்வு செய்ய ஒரு கமிஷன் அமைக்கபபடப்போவதாக கூறப்பட்டுள்ளது.
பிரபல தலித் தலைவரும், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நிறுவனருமான (தற்போது அவர் இந்த இயக்கத்தில் இல்லை) திரு தடா பெரியசாமி அவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI Act), பெரம்பலூர் மாவட்ட புள்ளி விவரங்களை பெற்றுள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களில், 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன.  அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 பேர் பெயரில் உள்ளன.  இந்த நிலங்கள் தலித் மக்கள் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சத்விகிதம் நிலங்கள் மற்ற வகுப்பினரால் ஆக்கிரமிகப்பட்டு அனுபவிக்கப்படுகிறது என்று தடா பெரியசாமி கூறுகிறார்.  அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறாரல் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.
திரு கருப்பன் இ.ஆ.பெ (ஓய்வு) தலைமையில் ஒரு மண்ணுரிமை மீட்பு இயக்கத்தை துவங்கியுள்ளார்கள்.  இந்த ஒரு சிறிய மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு என்றால், தமிழ்நாடு முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பார்க்கலாம்.
மூச்சுக்கு முன்னூறு முறை தலித் மேம்பாடு பற்றி வாய் கிழிய பேசும் அரசியல் வாதிகள், ஏன் இதை கண்டு கொள்ளவில்லை.  தலித் மேம்பாட்டிற்காக தங்களை அர்பணித்துகொண்டு, ஏசி காரிலும், விமானத்திலும் பறந்து கொண்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி, தலித் மேம்பாட்டிற்காக பாடுபடும் தலித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அனைவரும் கண்காணிக்கிறார்கள்.  
தடா பெரியசாமியுடன் நான் எடுத்த பேட்டியை ‘கிளிக்’ செய்து கேட்கவும்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...