This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்


தேர்தல் ஆணையம் சிறந்த முறையில், தமிழ்நாடு தேர்தலை நடத்தி முடித்துள்ளது.  இந்த அளவு சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற்றதற்கு, பணிபுரிந்த லட்சக்கணக்கான் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் முக்கிய காரணம்.  தேர்தலை சிறந்த முறையில் நடத்த வேண்டுமென்ற ஒர் நல்லெண்ணத்தில், பல பெண் ஊழியர்களும், ஆசிரியர்களும் பல தொல்லைகளை அனுபத்ததாக தகவல்கள் வருகின்றன.  எனது நண்பரும் ஒரு மூத்த பத்திரிகையாளருமான பத்மன், எனக்கு இந்த கட்டுரிஅயை அனுப்பியுள்ளார்.  நானும் இந்த விஷ்யம் பற்றி,  தேர்தல் பணியாற்றிய பெண் ஊழியர்களிடையே விவாதித்தேன்.  பதம்ன் எழுதியிருப்பதில் உணமை இருக்கிறது.

இந்த விஷ்யங்கள், குரேஷி, பிரவீண்குமார் அளவில் தெரியாமல் இருக்கலாம்.  அவர்கள் செய்யும் நல்ல பணிகள்,  ஏற்பாடு செய்யும் கீழ்மட்ட அதிகாரிகளால், மாசுபட்டுவிடக்கூடாது என்கிற் எண்ணத்தில், இதை எழுதுகிறோம்.   தேர்தல் ஆணையம், இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை அரங்கேற்றிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க்வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் வேண்டுகோள்.  தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயர் தேடித்தர, அந்த அதிகாரிகள் முயற்சி செய்யவும் செய்திருக்கலாம்.  வாசகர்கள், தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு எடுத்து செல்லுமாறு வேண்டுகிறேன்.

சீனிவாசன்.


தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள் 
பத்மன்

   உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதற்கு வலுவான தேர்தல் ஆணையமே அடிப்படைக் காரணம் என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்திய அளவிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை, பெருமளவில் வன்முறைக் கீறலின்றி பேரமைதியாகவே தேர்தல்  ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. சில குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றபோதிலும், பணப்பாய்ச்சலைத் தடுத்துவிட்டதாகப் பாராட்டு மழையில் நனைகிறது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குமேல் உண்மையிலேயே பிரசார கூக்குரல்கள் ஏதுமில்லை. வழக்கமான சுவரொட்டிகளும் வர்ண விளம்பரங்களும் இல்லாமல் வீட்டுச்சுவர்கள் வெறிச்சோடிக் கிடந்தாலும் பொதுமக்களிடம் நிம்மதி பளிச்சிட்டது. புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடிச் சீட்டு அறிமுகத்தால் கள்ளவாக்குகளையும் 99.9 சதவீதம் தடுத்திருக்கிறது. வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தேர்தல் ஆணையம் பெருவெற்றி பெற்றிருப்பதற்கு வாக்குப்பதிவு சதவீதமே சாட்சி.

    இத்தனை விஷயங்களும் ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தல் ஆணையத்தின்  வலிமையைப் பறைசாற்றினாலும், அதன் நடைமுறைகளில் சில முட்கள் அதன் சதையைக் கிழித்து வழியை ஏற்படுத்துகின்றன. அரசியல் ரீதியில் சில கட்சிகள் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் போக்கில் ஒருவித சவாதிகரம் புரையோடிக் கிடப்பதைக் கண்டதால் எழுந்த வேதனையின் வெளிப்பாடு இது.

   அரசுப் பணியாளர்களுக்கு ஆங்கிலத்தில் கவர்மென்ட் சர்வன்ட் என்ற பெயர் இருப்பதை அப்படியே அச்சுஅசல் பிசகாமல் கடைப்பிடிப்பது தேர்தல் ஆணையம் மட்டும்தான். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அது நடத்துகின்ற விதத்தில் பழைய பிரிட்டிஷ் தர்பார் மாறாமல் நீடிக்கிறது. ஜனநாயகத் திருவிழாவான தேர்தலை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற அசுர வேகத்தில், அந்த ஜனநாயகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் அசுரனாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மனிதநேய முகத்தைக் கழற்றி எறிந்துவிட்டுத்தான் இந்த ஜனநாயகப் பணியை தேர்தல் ஆணையத்தால் ஆற்றமுடிகிறது என்பது முரண்சுவை.


தேர்தல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விருப்பத்தின் பேரில் வருவதில்லை, கட்டாயத்தின் பேரில் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு, தேர்தல் பணியை ஆற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தமல்ல, அந்தப் பணிகளை ஆற்றுவோருக்கு அளிக்கப்படும் 'உபசரிப்பு' யாருமே விரும்பாத வகையில் இருக்கிறது என்பதே உண்மை. தேர்தலை வெற்றிகரமாகத் தேர்தல் ஆணையம் நடத்தினாலும், அதன் திறமை, நேர்த்தி இதில் பளிச்சிட்டாலும் தேர்தல் பணியாளர்களிடம் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் ஒரு தொழில் நேர்த்தி இல்லை, திறமைக் குறைவும் தென்படுகிறது. சரி, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அப்படி என்னதான் இன்னல்கள் இழைக்கப்படுகின்றன என்கிறீர்களா?

    தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அவசர கதியிலும், அலைக்கழிக்கப்பட்டும் இதற்குத் தயார் செய்யப்படுகிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் வீட்டுக்கும் அவர் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடிக்கும் உள்ள தொலைவு, அந்தச் சமயத்தில் தேர்தல் பணியாற்ற வேண்டியவருக்குள்ள இதர கடமைகள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் தொடங்கி, ஏறக்குறைய தேர்தல் தினத்தன்று நள்ளிரவு வரையில் நீடிக்கும் இந்த இமாலாயப் பணியில் இம்சைகள் அதிகம். கடினமான இந்த வேலைக்குப் பெண்களே அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கே உரியப் பிரத்யேகப் பிரச்சினைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை. உதாரணத்துக்கு, கைக்குழந்தையுடன் இருக்கும் பெண் என்றாலும், 5 மாதம் வரியுடைய குழந்தையாக இருந்தால் மட்டுமே விதிவிலக்கு. அதுவும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில், அவர்களது கைக்குழந்தைகள் 2 நாட்களுக்கு தாயார் இல்லாமல் தவிக்க வேண்டியதுதான்.

   உண்மையான காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் கட்டாய ஜனநாயகப் பணியில் இருந்து சில அரசு ஊழியர்களால் தப்ப முடியவில்லை. மகன் அல்லது மகள் அல்லது நெருங்கிய உறவினர்  திருமணத்தை வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாமல் பணிக்கு வந்து தவித்தவர்களும் உண்டு. வெளிநாடு சென்று உடனடியாகத் திரும்ப முடியாத நிலையில் இருந்த அதிகாரிகளுக்கும் கட்டாயம் அவர்கள் கடமையை ஆற்றத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இல்லையேல் உடனடி நடவடிக்கை. தாயகம் திரும்பிய பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்கள் தண்டனையைப் போக்கிக்கொள்ளலாம் என்று 'காருண்யத்துடன்' கூறிவிட்டது தேர்தல் ஆணையம். ஒரு அரசு வங்கிக் கிளையில் அனைத்து ஊழியர்களுக்குமே தேர்தல் பணி. ஒருசிலரையாவது வங்கிப் பணிக்கு விட்டுவைக்குமாறு வங்கிக் கிளை அதிகாரி கெஞ்சியும் மசியவில்லை தேர்தல் ஆணையம். வேறு கிளைகளில் இருந்து தற்காலிக ஊழியர்கள் தருவிக்கப்பட்டு நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.

   தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் ஆசிரியர்களே. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் வேலை ஆகிய பணிகளும் ஆசிரியர்களை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்தன. மத்தளத்துக்கு இருபக்கம் இடி. ஆசிரியர்களுக்கோ  எல்லாபக்கமும் இடி. பல்வேறு பணிகளால் ஆசிரியர்களுக்குப் பணமழை பொழிவதாக மற்றவர்கள் வயிறு எரிந்தாலும், தேர்தல் பணிக்குக் கிடைத்த ஊதியத்தைவிட போக்குவரத்து, சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் செலவழித்ததும், பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலும் அதிகம் என்பதே உண்மை.

   இந்த முறை தேர்தல் பணி நியமன உத்தரவு, தேர்தலுக்கு முதல் நாள் காலை 8 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இதற்கான பணியாளர்கள் அனைவரும் அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர். ஆனால், பணி நியமன ஆணை நண்பகல் 12 மணிக்குத்தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடியோ, பலருக்குப் பல மைல் தூரத்தில் இருந்தது. இந்த ஆணை கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு அவர்கள் சென்றாக வேண்டும். ஆனால் இதற்குரிய வாகன ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆணையம் என்பதால் ஆணையிட்டதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்துவிட்டது. பொறுப்புணர்வுள்ள அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களுக்கு வந்து சேர வேண்டியது அவைகளுடைய பொறுப்பு.

   சரி, வந்து சேர்ந்த இடத்திலாவது உரிய வசதிகள் உண்டா? 2  நாள் இரவு தங்க வேண்டுமே? அதுவும் பிரத்யேகப் பிரச்சினைகள் கொண்ட பெண்களின் கதி என்ன? பாதுகாப்புக்கு போலீசார் உண்டு. ஆனால், இரவில் தங்குவதற்கு, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, காலையில் குளிப்பதற்கு உரிய வசதிகள் கிடையாது. நகர வாக்குச்சாவடிகள் என்றால் பரவாயில்லை. கிராமப்புற வாக்குச்சாவடிகள் என்றால் சரியான சாப்பாடும் கிடையாது. கிராம, குக்கிராம வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் உணவுப் பொட்டலம் எதுவும் வழங்கவில்லை. பரிதாபப்பட்டு கிராம நிர்வாக அதிகாரிகள் வாங்கிக் கொடுத்தால்தான் உண்டு. இல்லையேல், கையேடு கொண்டு சென்ற பிஸ்கட்டுகளும் பழன்க்களும்தன் 2 நாட்களுக்கும் ஆகாரம்.

    அதுவும் இந்த முறை, கட்சி முகவர்கள் வாங்கிக் கொடுக்கும் காபி, டீயைக்கூட குடிக்கக் கூடாது என்ற கட்டளை வேறு. ஐயோ பாவம் என்று அந்த முகவர்கள் சாப்பாடு, வெயிலுக்கு குளிர்பானம் என்று தருவித்துக் கொடுத்தாலும்கூட அதைப் பெற்றுக்கொண்டால் அரசியல் தீட்டு ஒட்டிக்கொள்ளுமே! அவ்வாறெனில், அடிப்படைத் தேவையான உணவு உள்ளிடவற்றிற்கான உரிய ஏற்பாடுகளை வருவாய் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மூலம் தேர்தல் ஆணையமே முறைப்படி செய்ய வேண்டும் அல்லவா? தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் தேர்தல் பணியைச் செய்பவர்கள் இயந்திரங்கள் இல்லையே?

       இதேபோல், வாக்குப்பதிவு மாலை 5  மணியோடு முடிவடைந்து, மற்ற நடைமுறைகள் ஐந்தரை 6  மணிக்கு நிறைவடைந்தாலும்கூட தேர்தல் பணியாளர்கள் வீட்டுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை. வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாங்கினால்தானே அந்த இடத்திலிருந்து அவர்கள் நகர முடியும். ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வந்து பரிசோதித்து, இந்த இயந்திரங்களை வாங்கிச் செல்வது நடைமுறை. இதனால் சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு நேரத்தில்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டன. தேர்தல் பணியாளர்களைப் பொறுத்தவரை அத்தோடு தேர்தல் ஆணையத்தின் கடமை முடிந்துவிட்டது. அத்துவானக் காட்டில் நள்ளிரவு நேரத்தில் தேர்தல் பணி கடமையை பூர்த்தி செய்த பணியாளர்களின் கதி அதோகதிதான். அவர்கள் சொந்த வாகனத்தில், அல்லது வாகன ஏற்பாடுகளில் திரும்பிச் செல்ல வேண்டியதுதான். இல்லையேல், துணைக்கு யாரும் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடியிலேயே தங்கிச் செல்ல வேண்டியதுதான். ஆண்களாக இருந்தால் பரவாயில்லை. பெண்களின் கதி? ஒன்று, பாதுகாப்பான இடவசதி, இல்லையேல் முறையான வாகன வசதி செய்து தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா?

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி மனமுவந்து விருப்பத்துடன் வாக்களிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துவிட்டது. பாராட்டுகள். அதேபோல், தேர்தல் பணியாற்றுவோரும் எவ்வித அச்சமுமின்றி விருப்பத்துடன் பணியாற்றவரும் சூழ்நிலையை தேர்தல் ஆணையம் எப்போது கொண்டுவரும்?

 writer : PADMAN napnaban1967@gmail.com

2 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.
    பெண்களுக்கு நிறைய நடைமுறை சிக்கல்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.
    பெண்களுக்கு நிறைய நடைமுறை சிக்கல்கள்.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...