This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 11 மார்ச், 2009

தமிழ் நாட்டு கழகங்களின் அரசியல் நாகரீகம் - ஒரு அலசல்

இன்றைய ஜீனியர் விகடனில் ஒரு செய்தி படித்தேன். நடிகர் ராதர்ரவியின் தாயார் கடந்த வாரத்தில் மறைந்த போது, தி.மு.க தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயகாந்த்தும் துக்கம் விஜாரித்தார்களாம். அதனால், தங்கள் கட்சியைச் சார்ந்த ராதாரவியின் வீட்டு துக்கத்திற்கு, அண்ணா திமுக விலிருந்து யாரும் போகக் கூடாது என்று உத்தரவாம்.

இன்று மற்றொரு நிகழ்ச்சி. மருத்துவ மனையிலிருந்த முதல்வர் திரு கருணாநிதியை, ம.தி.மு.க தலைவர் திரு கண்ணப்பன் சென்று பார்த்தாராம். கட்சி தலைவர்கள் விரும்பவில்லை. கட்சியிலிருந்து அவர் விலகுகிறார்.

திமுக வும், அண்ணா திமுக விற்கு சளைத்தவர்களில்லை.

தமிழ் நாட்டு அர்சியலில் கழகங்கள் எந்த அளவு அரசியல் அநாகரீத்தை ஏலம் விடுகின்றன என்பதற்கு இவை ஒரு சாம்பிள்.

டில்லியில், காங்கிரஸும், பிஜேபியும் பரம எதிரிகள். பாராளுமன்றத்தில், தீவிரவாததின் மீது விவாதம் எழுந்த போது, அரசை ஆதரித்து பேசிய பி.ஜே.பி. தலைவர் திரு அத்வானியை, அவர் வீட்டிற்கு சென்று சோனியாவும், மன்மோகன் சிங்கும் நன்றி தெரிவித்தார்கள்.

உடல் நலம் குன்றி இருந்த திரு வாஜ்பாயை, அவரது வீட்டிற்கே சென்று அவர்கள் இருவரும் நலம் விஜாரித்தார்கள்.

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், அத்வானியை, அரசியலில் ஒரு 'ரோல் மாடல்' என்று அண்மையில் பாராட்டினார். எதிர் கட்சியின் பிரதமர் வேட்பாளரான அத்வானியை ஒரு காங்கிரஸ் முதல்வர் பாராட்டியதற்காக காங்கிரஸ் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்காக பி.ஜே.பியும், காங்கிரஸ் முதல்வர் பாராட்டியதற்காக போஸ்டர் ஒட்டிக்கொள்ளவில்லை. அதுதான் அரசியல் நாகரீகம். இது போன்று தமிழ்நாட்டில், கழகங்களில் நடந்திருந்தால், நினைக்கவே பயமாக இருக்கிறது.

பாரளுமன்ற கடைசி நாளன்று அத்வானி பேசும்போது, தன் அரசியல் எதிரிகளான சோம்நாத் சாட்டர்ஜியையும், பிரணாப் முகர்ஜியையும் பாராட்டி தள்ளினார்.

பாராளுமனறத்தில் சிறந்த பணீயாற்றிய உறுப்பினர்களை என்னுடைய பாட்யுனிவர்ஸலுக்காக பேட்டி எடுத்து வருகிறேன். இரண்டு நாட்கள் முன்பு, குஜராத்தில் இருக்கும் ஒரு காங்கிரஸ் எம்.பி. வி.கே. தும்மர் அவர்களை போனில் பேட்டி கண்டேன். உறுப்பினர்களின் தொகுதி நிதியை எவ்வாறு செலவிட்டீர்கள் என்றும், செலவிட்டதில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றும் கேட்டேன். சற்றும் தயங்காமல் உடனடியாக அவர், குஜராத்தில் உள்ள எம்.பி.க்களீல் தான் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும், தன்னுடைய பி.ஜே.பி. நண்பர் முதலாவதாக இருப்பதாகவும், பேட்டியில் கூறினார். இது போன்று தமிழ்நாட்டு திமுக அல்லது அதிமுக எம்.பி. இங்கு கூறியிருந்தால், அவர்கள் கதி என்ன ஆகியிருக்கும்?

பேட்டி முடிந்தவுடன் தும்மருடன், அவர்கள் மாநில பாலிடிக்ஸ் பற்றி பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு பிஜேபி யும் காங்கிரஸும் அரசியல் எதிரிகள். தேர்தல் முடியும் வரை அவர்கள் தேர்தல் களத்தில் முடிந்த வரை சண்டை போடுவதாகவும், தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்தவுடன், எம்.பிக்கள் அனைவரும் இணைந்து, குஜராத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி கட்சி பேதமில்லாமல் பேசி முடிவெடுப்பதாகவும் கூறினார்.

தான் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் 'நரேந்திர்பாயிடம்' பேசி, தன்னுடைய் தொகுதிக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறி அசத்தினார்.

தமிழ்நாட்டு அரசியலில் என்றுதான் நாகரீகத்தை கழகங்கள் கொண்டு வரப்போகின்றனவோ?

1 கருத்துகள்:

  1. சரியான ஆதங்கம். தமிழக அரசியல்வாதிகள், இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...